Indhyan Logo
Tamil Zone Banner
  • You are Here» Home
    • » Tamil Zone
      • » Thirukural
        • » அறத்துப்பால்
          • » புறங்கூறாமை
பொருட்பால்
திருக்குறள்
  • அறத்துப்பால்
புறங்கூறாமை
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.