Indhyan Logo
Tamil Zone Banner
பொருட்பால்
திருக்குறள்
  • பொருட்பால்
கயமை
மக்களே போல்வர்கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்.
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.