கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன் ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை.
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு.
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து.
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.